டெங்கு காய்ச்சல்: திருச்சி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சல்: திருச்சி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை
X

திருச்சி அரசு மருத்துவமனை டெங்கு வார்டு

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆங்காங்கே பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருச்சி மாநகராட்சி சார்பில் கோ. அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்டங்களில் டெங்கு ஒழிப்பு பணிக்கு தலா 150 பணியாளர்கள் என 600 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே குழந்தைகள் வார்டில் துறையூரை சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இது குறித்து மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். தீவிர காய்ச்சலால் வருபவர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்து வருகிறோம்.

அவ்வாறு டெங்கு பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!