தார்சாலை அமைத்து தராவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் என அறிவிப்பு
திருச்சி மாநகராட்சி 35வது வார்டு ராஜகணபதி நகரில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தெருவில் மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.எஸ்.புரம் பூங்கா அருகில் ராஜ கணபதி நகர் உள்ளது. இங்கு முதலாவது வீதி முதல் நான்காவது வீதி வரை நான்கு தெருக்கள் உள்ளது.
இதில், 2-வது வீதி முதல் நான்காவது வீதி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வீதியில் இன்று வரை தார்சாலை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் எந்த ஒரு வாகனங்களையும் அவசர தேவைகளுக்கு கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாநகராட்சி அலுவலகம், கோட்ட அலுவலகம், மாவட்ட கலெக்டர் என அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து அப்பகுதி மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் பத்து ஆண்டுகளாக குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாகவே அந்த சாலை காட்சி தருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேப்டன் சுபாஷ் ராமன் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூங்காக்கள் அமைக்க கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள சாலை வசதி என்பது கானல் நீராக உள்ளது வேதனை அளிக்கிறது. இனியாவது 10 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அலையும் எங்களுக்கு சாலை வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எங்கள் பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu