காங்கிரசுக்கு எத்தனை சீட்? தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் மூன்றாவது நாள் இன்று.
பிப்ரவரி 4-ஆம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும்.ஆதலால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் இறுதிகட்ட நிலையில் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவி இடங்களுக்கும் கட்சி அடிப்படையில் நடைபெறுவதால் இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.
பல அரசியல் கட்சிகள் களத்தில் இருந்தாலும் இந்தத் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே தான் நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சியில் கட்சி அமைப்பு ரீதியான 77மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள நிலவரத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இவை ஒருபுறமிருக்க தலைநகர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பதவி என்பது மிக பாரம்பரியமிக்க ஒரு பதவி. அதுமட்டுமல்ல சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் மாநில முதலமைச்சருக்கு இணையாக அந்தஸ்து பெறக்கூடிய பதவி என்பதால் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை இந்த தேர்தலில் எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயர் பதவியை வகித்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் .இந்த பேச்சுவார்த்தை இன்று மதியத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது இறுதி செய்யப்படும். இதனடிப்படையில் இன்று மாலைக்குள் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தி.மு.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை நாளை காலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 13-வார்டு கேட்டு வருகிறது. ஆனால் தி.மு.க தரப்பில் சிங்கிள் டிஜிட் அதாவது ஒற்றை இலக்கத்தில் ஒதுக்குவார்கள் எனக் கூறப்படுவதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu