திருச்சி காவிரி கரையின் சிந்தாமணி படித்துறையில் முதலைகள் நடமாட்டம்
காவிரி ஆற்றில் திருச்சி மேல சிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குளித்து வருகின்றனர். கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதற்கிடையே இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்றின் கரையோரம் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று கிழிந்த ஒரு வலையில் சிக்கி நிலையில் இறந்து கிடந்தது. அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் முதலை குட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் மறைந்து வசிக்கும் முதலைகள் குட்டிகளை ஈன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் முதலைகள் நடமாட்டம் இருக்கும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரிய முதலைகள் காவிரி ஆற்றில் குளிக்க வருபவர்களை கடித்து உள்ளே இழுத்து செல்வதற்கு முன்பாக வனத்துறை அதிகாரிகள் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சிந்தாமணி பகுதி மக்கள் மட்டும் அல்ல திருச்சி மாநகர மக்களின் கோரிக்கை ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu