நாய் தொல்லையை ஒழிக்க மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் கூறியதாவது:-
மேயர் அன்பழகன் : - திருச்சி மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் கே என் நேரு பல்வேறு திட்டங்களை திருச்சி மாநகரத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். நமது மாநகராட்சியில் சிறப்பான பணிகளை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு காரணமாக இருந்த கமிஷனர், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,புதிய மார்க்கெட் போன்றவை அமையும் பொழுது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும் அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் பேசினர் அது வருமாறு:-
மதிவாணன் (மண்டல தலைவர்) :-திருச்சி டோல்கேட் பகுதியில் தலைவர் கருணாநிதியின் சிலையை விளையாட்டு துறை அமைச்சர் திறந்து வைத்தார் தற்பொழுது டோல்கேட் என்று அழைக்கப்பட்டு வரும் அந்த இடம் இனி கலைஞர் டோல்கேட் என மாற்றி அறிவிக்கப்பட வேண்டும்.அதற்கு மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ரெக்ஸ் (காங்) :-
எனது 39 வது வார்டில் தற்பொழுதுதான் பாதாள சாக்கடை பணி முடிவுற்று தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் சேதப்படுத்தும் விதமாக எரிவாயு வீட்டிணைப்பு திட்டம் அமையவுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியபின், மக்கள் ஏற்றுக்கொண்டால் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்.
சுரேஷ் (இந்திய கம்யூ)விரைவில் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள சிக்னலில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்பிகாபதி (அதிமுக):-திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மட்டுமின்றி மாநகர் பகுதி முழுவதும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.இது மட்டுமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திருச்சி மொராய்ஸ் சிட்டி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 20 அடி ரோட்டில் தடுப்பு சுவர் அமைத்து விளம்பர பலகைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவகர் (காங்) :- திருவரங்கம் அடிமனை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்ற இடைக்கால தடை விதித்த நிலையில் மாநகராட்சி இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். விரைவில் இந்த பிரச்சனையை தீர்வு கண்டு வரி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாபர் அலி (திமுக): எனது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) :-எனது வார்டில் சமுதாயம் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
ராமதாஸ் (திமுக): எனது வார்டில் இரண்டு குழந்தைகளை நாய் கடித்து விட்டது. இது தொடர்பாக மேயர் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.
கமிஷனர் வைத்திலிங்கம் :- நாய்களை பிடிப்பதில் மாநகராட்சி ஓரளவுக்கு தான் நடவடிக்கை எடுக்க முடியும் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அங்கேயே விட்டு விட வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. அதனால் நாம் அதனை வேறு இடத்தில் கொண்டு போய் வைக்க முடியாது
முத்துச்செல்வம் (திமுக ) நாய்களை மாநகராட்சி சார்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் அன்பழகன் : - இது தொடர்பாக தனியாக ஆலோசனை செய்து ஒரு முடிவு எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu