திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை
X
திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது:

திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் போக்குவரத்து திட்டம் குறித்த 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மூலமாகவே, திருச்சிக்கான மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வர முடியும்.

கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இதுதவிர 11 சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 4 சதவீதம் பேர் சைக்கிளிலும், 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்திலும், 11 சதவீதம் பேர் காரிலும் செல்கின்றனர். மாநகர சாலைகளில் சராசரியாக 26 கி.மீ சராசரி வேகத்தில் பயணிக்க முடிகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.

இவை தவிர, மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திருச்சியில் 68 கி.மீ.க்கு தேவை உள்ளது. இதனை 3 வழித்தடங்களாக பிரித்துள்ளோம். சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business