சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்
X

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 13ம் தேதி நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருகின்ற 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் சு.சிவராசு, தலைமையில் இன்று (08.03.2022) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா முக்கிய விழாவாகும். அந்த பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். காவல்துறையினர் பூச்சொரிதல் விழா நடைபெறும் 13.03.2022-மற்றும் 14.03.2022 வரை பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் கோயிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்தல் வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்டுச்சந்தை பிரிவு ரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான அளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மருத்துவத்துறையினர் பொதுமக்கள் அவசர தேவைக்காக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் கோவில் செல்லும் கடைவீதி, காவல் நிலையம் அருகில், கோவில் திருமணமண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 2 நாள் முழுவதும் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ முகாம் செயல்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருமருங்கிலும் சில இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் ஒரே சீராக மண் அமைப்பு ஏற்படுத்தி, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்புத்துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும்

அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் அமைத்து தர வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதாரப்பணியாளர்களை கூடுதல் அளவில் நியமனம் செய்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையுடன் இணைந்து பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருள்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைள் வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும். திருக்கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் வேண்டும். திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பகுதியில் கட்டணமில்லா கழிவறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்கள், தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பூச்சொரிதல் விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், சமயபுரம்கோவில் இணை ஆணையர் கல்யாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா, காவல் துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!