திருச்சி மாநகராட்சி பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் தீவிர கொசு ஒழிப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்ள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக மேயர் அன்பழகன் கூறுகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் மாநகராட்சிப் பணியாளா்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா். கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத்திலோ டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீா் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீா் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் புழுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியாகிறது. எனவே, ஏடிஎஸ் கொசுப் புழு வளராமல் அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதுதொடா்பாக அவர் மேலும் கூறுகையில், எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் உள்ள தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும். தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடா், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருள்களான பிளாஸ்டிக் டப்பா, டயா், உடைந்த குடங்கள் போன்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என தெவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu