திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு
திருச்சியில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு.
திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். இந்த கனவை நனவாக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடம் அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அங்கு பணிகள் இன்னும் எதுவும் தொடங்கப்படவில்லை. அந்த இடத்தில் ஏற்கனவே மாநகராட்சி கழிவுநீர் பண்ணை இருந்ததால் சுமார் 2 அடி ஆழத்திற்கு மண்ணை அகற்றி விட்டு எட்டடி உயரத்துக்கு புதிய மணல் அடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறியிருந்தார். அதன்படி திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு தற்போது ரூ. 349.42 கோடியை ஒதுக்கீடு செய்து உள்ளது.
இதற்கான நிர்வாக அனுமதி ஆணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ரூ. 159 கோடியிலும் அதனருகில் லாரிகள் நிறுத்துமிடம் ரூ. 65 கோடியிலும், பன்முக வசதிகள் ரூ.84.68 கோடியிலும், சாலை மற்றும் அடிப்படை வசதிகள் ரூ. 40.50 கோடியிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான நிதி ஆதாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.டுபிட்கோ எனப்படும் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட நிதி நிறுவனத்தின் கீழ் ரூ.187 கோடி கடனாக வழங்கப்படும். மாநகராட்சி சார்பில்ரூ. 50 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. நிர்வாக அனுமதி பெறப்பட்டு விட்டதால் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu