கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
X

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள செங்கதிர் சோலை கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் என்பவரை அதே ஊரை சேர்ந்த 2 பேர் கட்டையால் அடித்து படுகொலை செய்தனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப்புகாரின் பேரில், புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்தவர்கள் பற்றி புகார் அளித்த எனது கணவர் சிவக்குமாரை முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதிர்வேல் மற்றும் தொழிலதிபர் ரவி முருகையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பிரபாகரன், தீபக் ஆகியோர் கட்டையால் அடித்து எனது கணவரை படுகொலை செய்தனர். அதனை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரபாகரன், தீபக் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் கைதுசெய்யாததை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

போராட்டத்தில் கொலையான சிவகுமாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தேவேந்திரகுல வேளாளர் நல சங்கத் தலைவர் ராஜேந்திரன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!