திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூல்

திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூல்
X

திருச்சியில்  முழு ஊரடங்கின்போது போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூல் செய்தனர்.

உலகலாவிய பெருந்தொற்றான கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை, திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டத்தின்பேரில் திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான 22 இடங்களை கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.

திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்தியபேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் டி.வி.எஸ். டோல்கேட். மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 தேதிவரை அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கின்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது 3,245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.6,49,000/ அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியின்றி செயல்பட்ட 5 கடைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2,500/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 09.01.2022-ம் தேதி அமல்படுத்தப்பட்டிருந்த முழுநேர ஊரடங்கு பாதுகாப்பு குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மத்திய பேருந்து நிலையம் முதல் மாநகரின் அனைத்து பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகர் முழுவதும் பாதுகாப்பிற்காக சுமார் 1000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என கூறினார்.

மேலும், இருசக்கர வாகனங்களில் காரணமின்றி வந்த 10 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வந்த 600 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,20,000/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், ஊரடங்கின்போது திறந்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.15000/- அபராத தொகை வசூல் செய்யப்பட்டும், சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7000/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முழு ஊரடங்கின் போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவமனைகள், பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் கொரோனா தொற்று கால ஊரடங்கானது திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்