பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
திருச்சியில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி எடமலைபட்டி புதூர் அருகே, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் இதர கட்டமைப்பு பணிகளை ரூ.832 கோடி செலவில் தமிழக அரசு அமைக்கிறது.
இதில் முதற்கட்டமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.350 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. 48 ஏக்கர் பரப்பளவில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 25 ஏக்கரில் கனரக சரக்கு வாகன முனையம், சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.210 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக தொகுப்பு 1-ல் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ.140 கோடி, கனரக சரக்கு வாகனம் முனையம் ரூ. 75 கோடியில், சாலைகள் மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.75 கோடியில், பல்வகைப் பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.59 கோடியில் என மொத்தம் ரூ.350 கோடி செலவில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று மாலை நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தாயனூர் கேர் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கான அடிக்கல்லை நட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள இடத்தை அவர் நேரில் பார்வையிட்டார். அங்கு புதிய பேருந்து முனையத்தின் மாதிரி வடிவமைப்பு, வரைபடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஸ்டால் வைக்கப்பட்டிருந்தது. இதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைய உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், தமிழக அரசு கொறடா கோவி. செழியன், அமைச்சர்கள் சக்கரபாணி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், தமிழ்நாடு அரசு டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, மாவட்ட கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியகராஜன், பழனியாண்டி, கதிரவன் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், பிரதிநிதிகள், திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், நிர்வாரிகள் எராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu