திருச்சி அருகே புதிய இடத்தில் 173 ஏக்கரில் மத்திய சிறை: அமைச்சர் நேரு தகவல்

அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி மத்திய சிறை புதிய இடத்தில் 173 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.
திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் வருகிற 23ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வரலாறு, முதல்வர் பதவிக்கு வருவதற்காக அவர் உழைத்த 50 ஆண்டுகால வரலாறு மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான 320க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகின்றன.
இந்த கண்காட்சியை நடிகர் பிரபு திறந்து வைக்கிறார். தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நடிகர் நடிகைகளும் இதில் பங்கே இருக்கிறார்கள். இந்த கண்காட்சி அமைய உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி வருகிறார். தி.மு.க. அமைச்சர்கள் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். அவர் மீது இது சம்பந்தமாக தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட உள்ளது. அவர் எங்கள் மீது வழக்கு போட்டாலும் நாங்கள் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எங்களது சொத்து கணக்கு தாக்கல் செய்துள்ளோம். அதற்கு மேல் எவ்வளவு பணம் இருந்தாலும் அல்லது சொத்து இருந்தாலும் அதை வருவாய்க்கு அதிகமாக சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை எடுத்துக் கொள்ளும் இது கூட அவருக்கு தெரியவில்லை. அதனால் அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.
திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியை நான் வாங்கி இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். காவேரி மருத்துவமனை ஏழு பேர் சேர்ந்து நடத்துகிறார்கள். தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியை அதன் உரிமையாளர் 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். முடிந்தால் செய்தியாளர்களாகிய நீங்கள் காவிரி மருத்துவமனைக்கு எனக்கு வாங்கித் தாருங்கள்.
தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட இருக்கிறது. திருச்சி மத்திய சிறை நகருக்கு வெளியே புதிய இடத்தில் 173 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். சிறைத்துறையின் அனுமதி கிடைத்ததும் அங்கு கட்டுமான பணிகள் தொடங்கும்.
இதே போல திருச்சி நகரில் மூன்று உயர் மட்ட மேம்பாலங்கள் அமைப்பதற்காக மண் ஆய்வு பரிசோதனை முடிவடைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்ட பணி தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு வருவதால் அதற்கு பின்னர் இந்த கட்டுமான பணி தொடங்கும். திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் இன்னும் 20 நாட்களில் திறக்கப்படும். அங்கு தற்போது இறுதி கட்டமாக மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் ௩௫ சதவீதம் முடிவடைந்து உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu