எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் தமிழக முதல் அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமை சிவகங்கை மாவட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய உள் வளாகத்தில் அவர் விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் பயணித்த போது அ.ம.மு.க.பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளியில் வந்த ராஜேஸ்வரன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், இதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் திருச்சியில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள தி.மு.க .அரசை கண்டித்து நாளை 14.3.2023, காலை 10:30 மணி அளவில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu