திருச்சியில் கார் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்தவர் கைது

திருச்சியில் கார் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்தவர் கைது
திருச்சியில் கார் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் கையாடல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அருகே கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோட்டை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 28) என்பவர் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

கரூர் மாவட்டம் கம்பிகேட் குயவர் தெருவை சேர்ந்த பெரியசாமியின் மகன் பாண்டியன் (29) என்பவர் இந்த நிறுவனத்தில் பழைய கார்களை வாங்கி விற்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கார்களை விற்று, புதிய கார் வாங்க இந்த ஷோரூமில் முன்பதிவு செய்து இருந்தனர்.

இதில் ஒருவருக்கு கடந்த 15-ந்தேதி புதிய கார் ஒதுக்கப்பட்டது. அவரிடம் காரின் முழுத்தொகையை கூறியபோது, தான் ஏற்கனவே பழைய கார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது தான் 5 வாடிக்கையாளர்களின் பழைய காரை ரூ.35 லட்சத்துக்கு விற்று, அந்த தொகை நிறுவனத்தில் வரவு வைக்காதது தெரியவந்தது.

உடனே பாண்டியனை அழைத்து, காருக்கான தொகையை செலுத்தும்படி கமலக்கண்ணன் கூறியுள்ளார். ஆனால் பாண்டியன் பணத்தை செலுத்தாமல் தலைமறைவானார். இதையடுத்து ரூ.35 லட்சம் கையாடல் செய்த அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயனிடம் கார் ஷோரூம் நிறுவன பொது மேலாளர் கமலக்கண்ணன் புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்த மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனா் உத்தரவிட்டார்.

இதையடுத்து உதவி கமிஷனர் பாரதிதாசன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய பஸ்நிலைய பகுதியில் வைத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story