திருச்சியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை, பணம் கொள்ளை

திருச்சியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை, பணம் கொள்ளை
X
திருச்சியில் பூட்டிய வீட்டின் கதவு, பீரோ உடைத்து 50 பவுன், நகை பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப நகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 69). மர ஆசாரியான இவரது மகன் சண்முகம். இவரும் தந்தைக்கு உதவியாக ஆசாரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் தனது மனைவி தனலட்சுமியுடன் கீழ்தள வீட்டிலும், மகன் சண்முகம் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் மேல் மாடியிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த 12-ம் தேதி லட்சுமணன் தனது மனைவி தனலட்சுமி, மகன் சண்முகம், இவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் சொந்த ஊரான பொன்னமராவதிக்கு சென்றனர்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் முதலில் சண்முகம் தனது மனைவியுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தனது தந்தை லட்சுமணனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பதறி அடித்துக்கொண்டு அவர் மனைவியுடன் திருச்சி வந்தார். வீட்டின் பூட்டுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து அவர்கள் உடனே உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!