அய்யாக்கண்ணுவை எதிர்த்து பாஜகவினர் போராட்டம்
பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 34-நாட்களாக கரூர் பைபாஸ் ரோட்டில், மலர் சாலையில் உள்ள அய்யாக்கண்ணு இல்லத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அய்யாக்கண்ணு இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் வந்த பாஜகவினரை, மெயின் ரோட்டிலேயே இரும்பு தடுப்புகள் உதவியுடன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து பாஜகவினர் தரையில் அமர்ந்து அய்யாக்கண்ணுவை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட தலைவர் ராஜசேகர் நிருபர்களிடம் கூறும்போது, காவல்துறையினர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடியை அவமதிக்கும் அய்யாக்கண்ணு மீது வழக்கு பதிவு செய்து அவரது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாளை முதல் பாஜகவினர் போலீஸ் மற்றும் அய்யாக்கண்ணுவை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.
தினமும் வீட்டின் முன்பு காம்பவுண்ட் சுவருக்கு வெளியே போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணு, பாஜகவின் எதிர் போராட்டத்தால், பாதுகாப்பு கருதி காம்பவுண்டுக்குள் போராட்டத்தை தொடர்ந்தார். இந்த போராட்டங்களின் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu