திருச்சியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மனு

திருச்சியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மனு கொடுக்க வந்தனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் 'திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு செக்கடி பஜார் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடம் குடியிருப்புப் பகுதியாகும். மேலும் இந்த பகுதியில் மூன்று கோவில்கள் உள்ளன .இதுதவிர வீட்டு வசதி வாரிய குடியிருப்பும் உள்ளது. இந்த பகுதியின் வழியாகத்தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சென்று வருகிறார்கள். ஆதலால் இந்த இடத்தில் மதுபானக்கடை திறந்தால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும்.
மேலும் இங்கு ஒரு ரேஷன் கடையும் இயங்கி வருகிறது. ஆதலால் இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிட வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்' என கூறப்பட்டிருந்தது.
இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை ,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு குறைகள், பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu