ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்
X

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர்கள் அமைதியை குலைக்கும் வகையில் சத்தம் போட்டனர்.

இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் மூலஸ்தானத்திற்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர்

அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர். உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவிஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர். இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்பபக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

இதனிடையே கோவிலில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு இந்து கோவில்களில் இருக்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த மோதல் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் அதிக சத்தம் போட்டனர். தட்டிக்கேட்ட காவலாளிகளையும்,காவலரையும் போலீஸ் டவுன் டவுன் என்று கோஷம் எழுப்பினர். இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai healthcare products