திருச்சியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கொள்ளை முயற்சி நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். மையம்.
திருச்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி திண்டுக்கல் சாலை கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஐ. ஓ. பி. வங்கியும், அதனையொட்டி ஏ.டி.எம். மையமும் அமைந்துள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மையத்திற்கு உரிய காவலாளி நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தனர். அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை சாதகமாக்கிக்கொண்ட கொள்ளையர்கள் நீண்ட நேரமாக கண்காணித்த பின்னர் தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த இரும்புக்கம்பியால் பணம் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வழியாக வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வாகன சத்தம் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி தப்பிவிட்டனர். இன்று காலை பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசார் ரோந்து வாகனம் வந்ததால் பெரும் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu