திருச்சி காவிரி ஆற்றிற்குள் இறங்கி போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு கைது
திருச்சியில் காவிரி ஆற்றிற்குள் இறங்கி அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழக அரசு உடனடியாக காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்தும் இதற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக அரசை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாநில துணைத்தலைவர் மேக ராஜன் முன்னிலையில் விவசாயிகள் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களது போராட்டம் 11-வது நாளாக இன்று போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கர்நாடகாவிடம் மற்றும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தர வேண்டும். விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஆற்று நீரில் கயிறு கட்டி இறங்கி, போராட்டம் நடந்த மணல் திட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதுகுறித்து அய்யாகண்ணு கூறும்போது, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, அதன்பின்னர் மீத்தேன் மற்றும் எரிவாயு எடுக்கும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். உதவி ஆணையர்கள் அன்பு, நிவேதா லட்சுமி ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu