முன்னாள் அமைச்சரின் மகனான திருச்சி 'ஆவின்' மேலாளர் சஸ்பெண்ட்
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஹரிராம். இவர் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில், பொறியியல் மேலாளராக பணியாற்றி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அயல் பணியில் திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு திருச்சி ஆவினில் பயன்பாட்டில் இருந்த, ரூ.1.5 கோடி மதிப்புள்ள பால் பதப்படுத்தும்பாய்லரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொறுப்பு ஹரிராமிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
ஆனால், அவர் அந்த பணியில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்ததுடன், விடுப்பில் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் வீணாகி ஆவினுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆவின் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதனடிப்படையில், சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திலிருந்து உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி ஆவினில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி மேலாண் இயக்குனருக்கு அறிக்கை அளிக்ககப்பட்டது.
அறிக்கையின் அடிப்படையில், பணியில் அலட்சியமாக இருந்து, ஆவினுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி, பொறியாளர் ஹரிராமை ஆவின் மேலாண் இயக்குனர் கந்தசாமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹரிராம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பிற் பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu