திருச்சியில் கடன் பிரச்சினையில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் கடன் பிரச்சினையில் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை முயற்சி
X

திருச்சியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சேகர்.

திருச்சியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 58). இவர் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தஞ்சாவூர் ரோடு, வரகனேரி மாரியம்மன் கோவில் அருகே இரும்பு பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூ.7 லட்சம் கடன் பெற்று, அதற்கு மாதம் ரூ.20 ஆயிரம் தவணை தொகையாக கட்டி வந்துள்ளார். கடன் வாங்கிய காலத்தில் இருந்து அவர் தவறாமல் தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடைசி தவணை மட்டும் ஏனோ கட்ட தவறியுள்ளது.


இதே போல மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் கடன் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வசூலிக்க வந்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சேகரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேகர் திருச்சி கோர்ட் நுழைவாயில் முன்பு நேற்று மாலை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை வைத்துள்ளார். திடீரென பற்றிய நெருப்பு அவரது உடல் முழுவதும் பரவிய நிலையில் அவர் நடந்து வந்ததைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மண்ணை அள்ளி அவரது உடல் மீது வீசியுள்ளனர்.

மேலும் தீ தடுப்பு உபகரணங்கள் கொண்டும் சேகரின் உடலில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அங்கு வந்த போலீசார் போலீஸ் வாகனத்தில் இருந்த துண்டை எடுத்து அவரது உடலில் போர்த்தி தீயை முற்றிலுமாக அணைத்தனர். மேலும் போலீசார் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த போது அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேரவே உடனடியாக அந்த ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேகர் கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!