குடி போதையில் வீட்டில் புகுந்த இளைஞர் மீது தாக்குதல்: தாய், 2 மகன்கள் கைது
பைல் படம்.
ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள மொட்டை கோபுரம் அருகே வசிப்பவர் பந்தல் பெருமாள் என்பவரின் மகன் அரவிந்த் என்கிற அரவிந்த்குமார் (வயது 28).
இவர் கடந்த 14-ந் தேதி குடிபோதையில் திருச்சி அண்ணாசிலை அருகே உள்ள பூசாரித் தெரு, அண்ணா நகர் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீடுகளின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், பனையடியான் என்பவரின் மனைவி பிச்சையம்மாள் (48) வீட்டுக்குள் அவர் நுழைந்ததாகவும், அப்பெண் சத்தம் போட்டதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், பிச்சையம்மாளின் மகன்களான பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (27), அர்ஜூன் (23) ஆகியோர் தங்களது தாய் வீட்டின் அருகில் குடியிருக்கும் வள்ளியம்மாள் என்பவரது வீட்டில் குடியிருக்கும் 4 கல்லூரி மாணவர்களை சந்தேகப்பட்டு அவர்களிடம் போய் தகராறு செய்துள்ளனர்.
பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அரவிந்த்குமாரை சத்திரம் பஸ் நிலையத்தில் வைத்து சரிமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அரவிந்த்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் சரக உதவி கமிஷனர்(பொறுப்பு) பாரதிதாசன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு பிச்சையம்மாள், மணிகண்டன், அர்ஜூன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu