உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு
உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்யும் குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
நம் உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்துக்குப் பின்பு மற்றவர்களுடைய பயன்பாட்டுக்காகத் தானமாக வழங்குவது உடல் உறுப்பு தானம். நம் உடலையே மருத்துவக்கல்விக்காகத் தானமாக வழங்குவதுதான் உடல் தானம்.
தனிநபர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆரோக்கியமான உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுநீரகங்கள், இதயம், கணையம், கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்பு தானம் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும்.
சிறுநீரகம், நுரையீரல், இதயம், கண்கள், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், திசுக்கள், எலும்புகள் ஆகியவற்றை தானம் செய்யலாம். அதே போல உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல்கள் பாதுகாப்பான முறையில் சிதைவடையாமல் ஒப்படைக்கப்படுகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புகள் கிடைக்காமல் மரணத்தை தழுவுகின்றனர்.
அதனால் மக்கள் முடிந்த வரை உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்களுக்கு கொடுப்போம். இப்படி உடல் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய குடும்பத்தினர்களை சந்தித்து அவர்களின் குடும்ப நிலை அறிந்து திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பணம் உதவியுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் இதுவரை 10 குடும்பத்தினருக்கு மேல் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் கரு. பேச்சிமுத்து அவரது விருப்பப்படி , அவரது குடும்பத்தினர் திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு கண்களை தானமாகவும், அவரது உடலை திருச்சி கி.ஆ பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கி உள்ளனர். அவரது குடும்பத்தினரை பாராட்டி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்னாடை போத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.ரா.சந்திரசேகர் தலைமையில் , கே.சி. நீலமேகம் , ஆர்.இளங்கோ, போத்தனூர் ஆர்.ரெங்கநாதன், மே.க.கோட்டை சந்திரசேகர், மணப்பாறை நா.வை. சிவம் , மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu