திருச்சி திருவானைக்காவலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அரிகண்டம் நடு கல்

திருச்சி திருவானைக்காவலில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அரிகண்டம் நடு கல்
X
திருச்சி திருவானைக்காவலில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுடன் யோகா ஆசிரியர் விஜயகுமார் குழுவினர்.
திருச்சி திருவானைக்காவலில் பழங்கால அரிகண்டம் நடு கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் வரலாற்றை தேடி ஒரு அடி நிகழ்வில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் பிரகார வீதியில் உள்ள அறிகண்டம் நடுகல் குறித்து அறிந்து கொள்வதற்காக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று மாணவர் அரிஸ்டோ உள்ளிட்டோர் களப்பயணம் மேற்கொண்டனர்.

நடுகல் குறித்து களப்பயணத்தில் பேசுகையில் ஆதி காலம் தொட்டே மனிதர்கள் இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிக் குறிப்புகள் இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது ஒன்றாக இருந்துள்ளது. விலங்குகளுக்கும் கோழிக்கும்கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர், பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

நடுகற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் கொண்டு அவற்றை நினைவுக்கல், வீரக்கல், நவ கண்டம், அரிகண்டம்,சதிகல், புலிக்குத்திப்பட்டான் கல்,யானைகுத்திப்பட்டான் கல்,காட்டுப்பன்றி குத்திபட்டான் கல்,கோழிக்கற்கள், ஏறுதழுவல் வீரக்கல்என வகைப்படுத்தலாம்.

நினைவுக்கல் என்பது ஆதிமனிதன் இறந்தவர்களைப் புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, அந்த இடத்தில் கற்களை நட்டு வைத்தான். அதுவே உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் குத்துக்கற்கள், கற்பதுகை, கல்வட்டம், கற்குவை, கற்திட்டை என உள்ளது. போர், மற்றும் விலங்குகளை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் தற்போதும் கூட கிராமங்களில் அய்யனார், செல்லியம்மன், கருப்பு கோயில்களில் இறந்தவர்களுக்கான நினைவுக் கற்களைக் காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைக்குழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர்.

வீரக்கல் என்பது போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் ஆகும். நாம் வீரக்கல் என்போம். பல்லவர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை இது போன்ற வீரக்கற்கள் தமிழகம் முழுக்கக் காணக் கிடைக்கின்றன.நவகண்டம் என்பது இரு நாடுகளுக்கு இடையே போர் நடை பெறும் போது, தன்னுடைய நாடு வெற்றியடைய தன் உயிரைக் கொற்றவைக்குப் பலி கொடுப்பது நவகண்டம் எனப்படும். தன்னுடைய உடலில் எட்டு பாகங்களை அரிந்து கொற்றவைக்குப் படையல் இட்டு கடைசியாகத் தன் தலையைத் தானே அரிந்து கொற்றவைக்குப் பலி கொடுத்துக் கொள்வது நவகண்டம் ஆகும்.

இத்தகைய சிற்பத்தில் உள்ள வீரன் கையில் உள்ள கத்தியானது வீரனின் கழுத்துக்கு நடுவே காட்டப்பட்டிருக்கும். அரிகண்டம் என்பது நவகண்டத்துக்கும் அரிகண்டத்துக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. அரி கண்டத்தில் ஒரே வெட்டில் தலை துண்டாகும்படி வெட்டிக்கொல்வார்கள். தலை முடியை வளைவான ஓர் மூங்கிலில் இணைத்து, தன் தலையைத் தானே வெட்டிக்கொள்வார்கள். தமிழகம் முழுக்க இது போன்ற அரிகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தன் தலைமுடியைத் தானே பிடித்திருப்பது போல் இச்சிற்பங்கள் காட்டப்பட்டிருக்கும்.

சதிகல் என்பது போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ கணவன் இறந்தவுடன் மனைவி உடன் கட்டை ஏறுதல் அல்லது சில வாரங்கள் கழித்து சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, தீயில் புகும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகற்கள் சதிகற்கள் எனப்பட்டன. புலிக்குத்திப்பட்டான் கல் என்பது மனிதன் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தபோது, அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொன்று வந்தன. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்குச் சென்று அந்தப் புலியைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தைப் போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலிக் குத்தி நடுகல் ஆகும்.

யானை குத்திப்பட்டான் கல் என்பது வரலாற்றுக் காலம் தொடங்கியே போரில் யானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்தது. காட்டு யானைகளைப் பிடித்து போர்ப் பயிற்சி கொடுத்து போரில் பயன்படுத்தினர். காடுகளின் அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளையும் கொன்று வந்தன. இப்படி போரில் அல்லது யானை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களே யானை குத்திப்பட்டான் கல் எனப்படும்.

காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் என்பது விளை நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, தானும் இறந்த வீரனுக்காக வைக்கப்படும் நடுகல் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஆகும். கோழிக்கற்கள் என்பது மனிதனுக்கு மட்டுமல்லாமல் தான் வளர்க்கும் நாய், கோழி போன்றவற்றுக்கும் நடுகல் எடுத்துள்ளார்கள்.ஏறுதழுவதல் வீரக்கல் என்பது ஏறுதழுவுதல் என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. ஏறுதழுவதில் இறந்த வீரனுக்கு ஏறுதழுவல் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் நாலாம் பிரகாரம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஈசான்ய விநாயகர் திருக்கோவில். திருக்கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோவில் மதில் சுவர் வடமேற்கு மூலையில் நீள் செவ்வக வடிவில் அரிகண்டம் நடுகல் உள்ளது. அரிகண்டம் நடுகல்லில் இடதுகையினால் தலை முடியை பிடித்தாற்போல் வலது கையினால் குறுவாள் வைத்து கழுத்து அறுப்பது போல் புடைப்புச் சிற்பம் உள்ளது.

தரைத்தளத்திலிருந்து அரிகண்டம் நடுகல் 110 சென்டிமீட்டர் உயரமும், 37 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது இடுப்பில் குருவாள் உள்ளதை கண்டறிய முடிகிறது. நகரமயமாக்கல் சூழலில் நடுகல் பூர்வீகமாக இருந்த இடம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. நடுகல் குறித்த புரிதலும் இன்றைய தலை முறையினருக்கு இல்லை என்பது களப்பயணத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் திருவானைக்காவல் அரிகண்டம் நடுகல் குறித்த சான்றுகளை தேடும் பணியில் வரலாற்றை நோக்கி ஒரு அடி பயணத்தில் தொடர்கிறோம் என்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது