ஒத்த தட்டு தராசு உள்ளிட்ட பழங்கால அளவு கோல் குறித்த சிறப்பு சொற்பொழிவு
ஒத்த கோல் தராசு பற்றி சொற்பொழிவில் விளக்கம் தரப்பட்டது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தூக்குக் கோல், ஒத்ததட்டு தராசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
சாய் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுதந்திர இந்தியா நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இல்லத்திலேயே புழங்கு பொருட்கள் காட்சியத்தை வைத்துள்ள திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்து மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் சமுதாய வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற புழங்கு பொருள் காட்சியகத்தை அமைத்துள்ளேன்.உணவு தயாரிக்கும் கற்கருவியான ஆட்டுரல், குத்துரல், திருகைகல், கல்வம், உழவர் கருவியான மர ஏர்கலப்பை, நிறுத்தல் அளவையில் ஒத்த தட்டு தராசு உட்பட பல்வேறு பொருட்கள் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
“வெள்ளைக்கோல்வரை / வெள்ளிக்காவரை / தூக்குகோல் / தூக்கு / ஒத்த தட்டு தராசு” என்பது பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ற ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க.
'வெள்ளைக்கோல்வரை'ங்கிறது வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு. அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடு. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டிய பொருள் வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பாங்க.
தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த கோட்டுலயே கயித்த இறுக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம். கோல் கீழபாக்க இருந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்லை."சமன் செய்து சீர்தூக்கும் கோல்" என்பது இது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu