கானல் நீராகி போன திருச்சி பல்கலைக்கழக வலுதூக்கும் மாணவர்களின் கனவு

கானல் நீராகி போன திருச்சி பல்கலைக்கழக வலுதூக்கும் மாணவர்களின் கனவு
X
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வலுதூக்கும் மாணவர்களின் கனவு கானல் நீராகி போய் உள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வலுதூக்கும் (பவர் லிப்டிங்) பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மாணவ மாணவிகள் 8 பேர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகள் வருகிற 20-ஆம் தேதி சென்னை வண்டலூரில் நடைபெற உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனுமதி அளித்தால்தான் இப் போட்டியில் நாங்கள் பங்கேற்க முடியும் .ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை .நாங்கள் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகமும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக கலெக்டரின் அறிவுறுத்தலின்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டு துறை செயலாளர் (பொறுப்பு) மெகபூப் ஜானை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இதுகுறித்து விளையாட்டு துறை செயலாளர் கூறுகையில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலாக நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பல்கலைக்கழக அணியை தேர்வு செய்வதற்காக எந்தெந்த விளையாட்டு நிகழ் ஆண்டு நடத்தப்படும் என பல்கலைக்கழக பொது குழுவில் வைத்து தேர்வு செய்யப்படும். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பொதுக்குழுவில் எந்த கல்லூரியும் வலுதூக்கும் போட்டியை தேர்வு செய்யவில்லை.

மேலும் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே போட்டிகளை நடத்தி பல்கலைக்கழக அணியை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த கல்லூரியும் வலுதூக்கும் போட்டியை நடத்த கூறவில்லை .தவிர அகில இந்திய பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு விடுமுறை காலத்தில் அகில இந்திய அளவிலான போட்டியை நடத்துவதாக திடீரென அறிவித்துள்ளது. தற்போது கல்லூரிகளுக்கு இடையே போட்டியை நடத்தி அணியை தேர்வு செய்யப் போதிய கால அவகாசம் இல்லை .பெரும்பாலான கல்லூரிகளில் வலுதூக்கும் அணிகள் இல்லாததே இதற்கு காரணம். போட்டியே நடத்தாமல் பல்கலைக்கழகம் அணியை போட்டிக்கு பரிந்துரைக்க இயலாது என்றார்.

இதன் காரணமாக திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக வலுதூக்கும் வீரர்களின் அகில இந்திய போட்டியில் பங்கேற்கும் கனவு கானல் நீராகி போய் உள்ளது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?