மூளையை பாதுகாக்க 8 வழி முறைகள்: டாக்டர் அலீம் கூறிய அற்புத யோசனைகள்
திருச்சி ஜேகேநகர் விரிவாக்கப்பகுதி மக்கள் நல சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் எம்ஏ அலீம்.
மூளையை பாதுகாக்க எட்டு வழிமுறைகள் இருப்பது பற்றி திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க விழாவில் டாக்டர் அலீம் கூறினார்.
திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் மூன்றாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று பூங்கா எதிரில் உள்ள சிட்டி ஹார்வெஸ்ட் அசம்பிளி சர்ச் அரங்கில் நடைபெற்றது.
மக்கள் நல சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மின் பொறியாளர் ஜெ,திருஞானம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரெக்ஸ் குலோத்துங்கள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் துணைத் தலைவர் ரா. பொன்சாமி வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி கி ஆ பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், திருச்சி ஏபிசி மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை நிபுணரும், திருச்சி மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழு உறுப்பினரும், அமெரிக்கன் அகாடமியின் மூளை நரம்பியல் துறை தென்னிந்திய பிரதிநிதியுமான டாக்டர் எம்.ஏ. அலீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமது உடலில் உள்ள முக்கிய பகுதி தலை என்றால் அந்த தலை உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் கண்ட்ரோல் செய்வது மூளை. மூளை சரியாக செயல்பட்டால் தான் நமது உடலின் இயக்கம் மற்றும் அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சிறப்பாக இருக்கும். ஆதலால் மூளையை பாதுகாக்க வேண்டியது மனிதனாக பிறந்த நமது ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.
மூளையை எவ்வாறு சிறப்பாக செயல்பட வைப்பது? மூளையின் செல்கள் இறந்து விட்டால் அவற்றை திரும்ப வளர வைப்பது மிகவும் கடினம். எனவே சரியான நேரத்தில் மூளையின் செல்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவற்றுக்கு உரிய சிகிச்சை பெற வேண்டும். மூளையை வளர்ப்பதற்கு அதனை பாதுகாப்பதற்கு எட்டு வழிமுறைகள் உள்ளன.
அதாவது மூளை நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் தினமும் நிறைய நூல்கள் படிக்க வேண்டும். நூல்கள் படிக்க முடியவில்லை என்றால் டிஜிட்டல் முறையில் கூட படிக்கலாம். மூளையின் கனெக்டிவிட்டியானது சமூக சேவையுடன் இருக்கவேண்டும். மரம் வளர்ப்பது நல்லது. உணவே மருந்து உணவே நஞ்சு என்கிற நிலை தான் தற்போது உள்ளது. நாம் எப்போதும் சாப்பிடும் உணவில் நஞ்சு நிறைந்து இருக்கிறது.
காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்கள் நோய்களை கட்டுப்படுத்தும். என் வி எனப்படும் இறைச்சி வகைகளை விட காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இலை தழைகளை சாப்பிடுகிறது ஆடு. ஆனால் அந்த ஆட்டுக்கறியில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் அவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து குறைந்த அதே நேரத்தில் நார்ச்சத்து புரோட்டின் சத்து நிறைய எடுத்துக் கொண்டால் மூளையை நல்ல முறையில் பராமரிக்க முடியும் .
அதே போல சிறு தானியங்களை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வயதானால் ஏற்படக்கூடிய ஞாபகம் மறதியை குறைக்க உதவும். இன்னொரு முக்கியமான விஷயம் மூளையை பாதுகாக்க உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். வாரத்திற்கு 150 நிமிடம் வாக்கிங் செல்ல வேண்டும். வாக்கிங் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது. நாம் வாழும் இடத்தில் பசுமையான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் மூளை எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மன அழுத்தம் என்பது ஒரு சைலன்ட் கில்லர் என மருத்துவ துறையில் கூறுவது உண்டு. ஆதலால் மன அழுத்தம் ஏற்படாதவாறு இசை கேட்பது, இறை நூல்களை படிப்பது ,யோகா செய்வது மன அழுத்தத்தை குறைக்கும். இதன் மூலம் வயதானாலும் நம் மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் என்பது மன அழுத்தத்தை குறைக்க கூடியது. தூங்கப் போகும் போது டென்ஷன் ஆக இருக்க கூடாது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அணைத்து வைப்பது மிகவும் நல்லது. புகைப்பிடிப்பது மது பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நோய்களின் அறிகுறிகளை அறிந்து கொள்வதற்கு இது உதவும்.
மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். எனவே அது போன்ற நிலை வராமல் இருக்க உரிய பயிற்சிகள் எடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர் அலீமிற்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஜேகே நகர் விவாக்கப் பகுதியின் வளர்ச்சிக்கு துணைபுரிந்து புதிய திட்டங்களை நிறைவேற்றி கொடுத்த மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகரில் அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, நகரில் உள்ள தெருக்களின் மூலமாக மரக்கன்றுகள் நடுவது, மாதம் ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்துவது, இளைஞர்கள் மற்றும் உறுப்பினர்களின் நலன் கருதி இறகு பந்து விளையாட்டு திடல் ஏற்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சங்க பொருளாளர் சாமுவேல் சதீஷ் குமார் ஆண்டறிக்கை படித்தார். சங்க இணை செயலாளர் எர்னஸ்ட் ஜெடிக்ஸ், செயற்குழு உறுப்பினர்கள் அச்சுதன், மன்சூர் உசேன், அன்பானந்தன், மணி முருகன், தினகரன் முன்னாள் ஆசிரியர் இரா பவுன்ராஜ், ரெங்கராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முகமது சித்திக் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu