நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி தி.மு.க.விற்கு மைனசா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி தி.மு.க.விற்கு மைனசா?
X
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிலவும் 8 முனை போட்டி தி.மு.க.விற்கு மைனசா, பிளசா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளின்1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிகளின்3,843 பதவி இடங்களுக்கும், 490 பேரூராட்சிகளின்7,621 பதவிஇடங்களுக்கும் என மொத்தம் 12, 838 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் களம் ஒரு வித்தியாசமான போட்டியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆம். தமிழகத்தில் தற்போது நடப்பது 8 முனை போட்டி. இதுவரை இதுபோன்ற ஒரு அதிகப்படியான கட்சிகளின் போட்டியை தமிழக உள்ளாட்சித் தேர்தல் களம் சந்தித்தது இல்லை என்றே சொல்லலாம்.

ஆளும் கட்சியான தி.மு.க. அனைத்து உள்ளாட்சி பணியிடங்களையும் கைப்பற்றிய தீரவேண்டும் என்ற ஒரு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. த.மு.மு.க. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் இருந்தாலும் பல்வேறு இடங்களில் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக தி.மு.க. கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் ,உள்ளடி வேலைகள் அதன் வெற்றியை பாதிக்குமோ என்கிற அளவுக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தபடி கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு விட்டு சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல தனித்து களம் இறங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தோளில் சவாரி செய்த பா.ஜ.க. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது பலம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தனித்து களம் காண்கிறது.

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டது.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி இத் தேர்தலில் தனித்து களம் கண்டாலும் தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்து வதற்கு கூட தடுமாறிக் கொண்டிருக்கிறது. சில மாவட்டங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கும் தி.மு.க. விற்கும் தாவிக் கொண்டிருக்கிறார்கள் அதனை தடுத்து நிறுத் முடியாமல் கட்சி தலைமை தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அதனால் தான் கட்சியின் தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமலேயே அக்கட்சியின் நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது அக்கட்சிக்கு ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் ஆகும். தனித்து போட்டியிடும் பா.ம.க.வும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கிய சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து சீமானின் தம்பிகள் பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டி என்று முதலில் அறிவித்தாலும் பல மாவட்டங்களில் அக்கட்சிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லாதது மிகப் பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அதே போன்ற நிலைமைதான் தமிழகத்தின் ஒரு பெரிய மாற்று சக்தியாக உருவெடுத்து தற்போது தேய்ந்து போன நிலையில் உள்ள தே.மு.தி.க. கட்சிக்கும்.

அவர்கள் தனித்து போட்டி என்று அறிவித்தாலும் பல மாவட்டங்களில் பல நகரங்களில் சரியான வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் .

இந்த தேர்தலில் எட்டு முனைப் போட்டி என்று கூறினாலும் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல எஸ்.டி.பி.ஐ .கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் ஆங்காங்கே தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அந்த வகையில் எட்டு முனைப் போட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பதினோரு முனைப் போட்டி என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இந்த தேர்தல் பல கட்சிகளுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நாடாளுமன்றம் சட்டமன்ற தேர்தல்களில் தான் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு அலை வீசும் அந்த அலை ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்தும் இன்னொரு கட்சியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பும். இதுதான் தமிழக அரசியலின் கடந்தகால வரலாறு. பல நேரங்களில் தமிழகத்தின் வெற்றி தோல்வியை இந்த அலை தான் நிர்ணயித்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திவரும் தி.மு.க.விற்கு இத்தேர்தல் ஒரு அக்னிப்பரீட்சை என்றே சொல்லவேண்டும். காரணம் கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க. அந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இந்த எட்டு மாத காலத்தில் நிறைவேற்றி இருக்கிறதா? என்றால் இல்லை என்கிறார்கள் மக்கள்.

எனவே ஆளுங்கட்சிக்கு வாக்காளர்களால் வழங்கப்பட இருக்கும் மதிப்பீடாக இத்தேர்தல் கருதப்படுகிறது. எட்டு முனைப் போட்டி, போட்டி வேட்பாளர்கள், கூட்டணிக்குள் நிலவும் குழப்பம், இவை யெல்லாம் ஆளும் தி.மு.க.விற்கு மைனஸாக அமையுமா ?அல்லது முறையான திட்டமிடல் இல்லாத அ.தி.மு.க.வால் வாக்குகள் சிதைந்து இது பிளஸ் ஆக அமையுமா?என்பது தேர்தல் முடிவிற்குப் பின்னர் தான் தெரிய வரும். இத்தேர்தலில் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் ஒரு தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள் மக்கள். அந்த தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு நல்ல மதிப்பெண்ணாக கிடைக்குமா அல்லது எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மீது எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சுமத்தும் குற்றச்சாட்டுகளில் மிக மிக முக்கியமானது பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட தரமற்ற பொருட்கள், ரூ.2500 பரிசுத்தொகை வழங்கப்படாமை, மகளிருக்கான மாத உரிமை தொகை ரூ 1000 வழங்காமை, கியாஸ் சிலிண்டர் கட்டணத்தில் மானியம் வழங்காமை, மாதம் ஒருமுறை ஈபி ரீடிங் எடுக்காமை, நீட் தேர்வு ரத்து பிரச்சினை, கல்விக் கடன் ரத்து என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் தி.மு.க.விற்கு மிகப்பெரிய மைனஸ் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது.

ஆனால் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களோ தமிழக வாக்காளர்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள். அதற்கு காரணம் மாநில அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டுமானால் அந்த கட்சியின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தால்தான் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும் என்பது எங்கள் கருத்து மேலும் எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. உழைப்பதற்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆதலால் நாங்கள் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும், 138, நகராட்சி களையும் 490 பேரூராட்சிகளையும் கைப்பற்றிய தீருவோம் என உறுதியாகக் கூறுகிறார்கள்.

அ.தி.மு.க. தரப்பில் இதற்கு நேர் எதிரான கருத்துக்கள் கூறும் கட்சியின் முன்னணி தலைவர்கள் தி.மு.க. மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வதோடு எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஒருங்கிணைப்பாளரும் தி.மு.க. ஆட்சி மீது உள்ள மைனஸ் பாய்ண்ட்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கேள்விக்கணைகளை மக்களிடம் தொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறார்கள். அதன் மூலம் மக்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கி ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை கொடுப்பார்கள்.

பல மாநகராட்சிகளில் பல நகராட்சிகளில் பல பேரூராட்சிகளில் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு வெற்றி வாகை சூடுவார்கள். அதற்கான களநிலவரம் எங்களுக்கு இப்போதே தெரிகிறது. இந்த தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் அ.தி.மு.க. வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை இந்த தேர்தலின் மூலம் நாங்கள் மீட்டெடுத்து வெற்றிக்கனியை அம்மாவின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என அடித்துக் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழல், 8 முனை போட்டி ஏற்படுத்தி உள்ள தாக்கம், அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு என உள்ள செல்வாக்கு, அதிகார தன்மை, நட்பு வட்டாரம், சாதி பலம், பண பலம் இவை தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பது உள்ளாட்சி அரசியலின் சித்தாந்தம் ஆகும்.

இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் பல சுயேச்சை வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்கள் கூட வெற்றிவாகை சூடிட நேரிடும். தி.மு.க.வில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் தி.மு.க கூட்டணியிலே இல்லை என்று சொல்லுமளவிற்கு பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து களம் கண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் தான் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வியூகங்களோடு தேர்தலை எதிர் கொண்டாலும் இறுதி முடிவு வாக்காள எஜமானர்கள் கையில்தான். அவர்கள் அளிக்கும் தீர்ப்பின் முடிவு பிப்ரவரி 22ஆம் தேதி தான் தெரியவரும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!