திருச்சி விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி பயிர் காப்பீடு தொகை விடுவிப்பு

திருச்சி விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி பயிர் காப்பீடு தொகை விடுவிப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் கூறி உள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில், கடந்த 2020-21-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் நெல், மக்காச் சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக

நெற்பயிருக்கு 11,305 விவசாயிகளுக்கு ரூ.19.05 கோடி,மக்காச்சோளப் பயிருக்கு 11,938 விவசாயிகளுக்கு ரூ.45.36 கோடி மற்றும் பருத்தி பயிருக்கு 650 விவசாயிகளுக்கு ரூ.1.68 கோடி ஆக மொத்தம் 23,893 விவசாயிகளுக்கு ரூபாய் 66.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021-22-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம் -41 மற்றும் பருத்தி-11 பயிர்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இந்த திட்டத்தில் இணைய, முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களை அணுகலாம்.

இந்த திட்டத்தில், நெற் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.537/- மற்றும் பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.585.87/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மக்காச் சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.373.50/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும். எனவே, விவசாயிகள் அனைவரும் நடப்பு ஆண்டில் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு