பெண் வங்கி அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 5 வருடம் சிறைத்தண்டனை
திருச்சி நீதிமன்றம் (கோப்பு படம்).
வங்கி பெண் அதிகாரியை கொலை செய்ய முயன்ற வங்கி நகை மதிப்பீட்டாளருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமி புரத்தை சேர்ந்தவர் கோகிலா.இவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை என்ற கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதே கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தவர் இமானுவேல் லூர்து ஜோசப் (வயது 41). இவர் திருச்சி வயலூர் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர்.
இமானுவேல் லூர்து ஜோசப் தினமும் வேலைக்கு தாமதமாக வந்ததால் நிர்வாகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக அவரது செயல்கள் தொடர்பாக கிளை மேலாளர் கோகிலா உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். இதனால் இமானுவேல் ஜோசப்புக்கு வங்கி கிளை மேலாளர் கோகிலா மீது கடும் கோபம் ஏற்பட்டது .
இந்த நிலையில் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 28 -6 -2018 அன்று கோகிலா இருக்கையில் இல்லாத நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்த இமானுவேல் லூர்து ஜோசப் அவர் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் நைட்ரிக் ஆசிட் என்ற திரவ விஷயத்தை ஊற்றிவிட்டு வந்துவிட்டார். இதை அறியாமல் அந்த தண்ணீரை எடுத்து குடித்த கோகிலா அதன் செடி மற்றும் வாசத்தை பார்த்து கீழே துப்பி விட்டார். இதனால் அவர் உயிர் பிழைத்தார்.
கோகிலாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குடி தண்ணீரில் விஷத்தை கலந்த இமானுவேல் லூர்து ஜோசப் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. மண்ணச்சநல்லூர் போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்தனர். வங்கிப் பெண் அதிகாரி கோகிலாவை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இமானுவேல் லூர்து ஜோசப்பிற்கு ஐந்து வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu