திருச்சியில் கைதான கொள்ளையனிடம் இருந்து 48 பவுன் நகைகள் மீட்பு
திருச்சி மாநகரத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் திருச்சி மாநகர தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையரா கார்த்திகேயன் பொறுப்பு ஏற்ற பின்னர் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகரத்தில் கோரிமேடு, கருமண்டபம் அசோக்நகர், கே.கே.நகரில் உள்ள நேரு தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி செசன்ஸ் கோர்ட் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை நடந்த பகுதிகளில் கடந்த 2 மாத காலமாக பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதில் துப்பு துலங்கியதன் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கிலிமுத்து மகன் மணிகண்டன் (வயது 26,) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மணிகண்டன் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கு பயணச் செலவுக்கு தன்னிடம் பணமில்லாததால் நகைகளை திருடியதாகவும் ஒப்புக்கொண்டதின் பேரில் அவரை கைது செய்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிகண்டனிடம் இருந்து 48 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணிகண்டனுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மணிகண்டனை பிடித்து நகைகளை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்தி கேயன்வெகுவாக பாராட்டினார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu