திருச்சியில் 3 மாதங்களில் குற்றச்செயல் புரிந்த 4,018 பேர் கைது
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் உள்ளார். இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து திருச்சி நகரில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திருச்சி நகரில் 4 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கஞ்சா கடத்தல் மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
மீண்டும் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 41 பேர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக நிர்வாக செயல்துறை நடுவர் முன்பாக நன்னடத்தை பிணை பத்திரம் தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த ரவுடிகளில் 11 பேர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருச்சியில் குற்ற செயல்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ரவுடியிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu