திருச்சி: கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் 3,500 படுக்கைகள்
திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா வார்டு.
உலகெங்கும் தற்போது கொரோனா 3-வது அலை வேகமெடுத்து வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் தலை தூக்க தொடங்கி உள்ளது. மற்றொரு பக்கம் புதிய வைரஸ் தொற்றான ஒமிக்ரானும் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக, தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுடன், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரையிலும் ஊரடங்கு கட்டுப்பாடும், மத வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல், கடைகள், திரையரங்கம் உள்ளிட்ட வைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 31-ந் தேதி 8 ஆக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 123 ஆக உயர்ந்தது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 3,500 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா 2-வது அலை காலக்கட்டத்தில் இருந்ததை போல பிஷப் ஹீபர் கல்லூரி, காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மேலும் வட்டார வாரியாகவும் கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறி இல்லாத இணை நோய்களிகள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் இருப்பு தேவையான அளவு இருக்கிறது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக இடை வெளி, முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால், அந்த தெருவே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu