பணியின்போது இறந்த திருச்சி போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்

பணியின்போது இறந்த திருச்சி போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்
X
பணியின்போது இறந்த திருச்சி போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திருச்சியில் பணியின் போது சாலை விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் துறை அரியமங்கலம் காவல் நிலைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ஸ்ரீதர் (வயது 45 ).இவர் கடந்த 30 -7 -2023 அன்று ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பால பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோதியதில் ஸ்ரீதர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் ஆகஸ்ட் 1ம்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ஸ்ரீதரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்றுப்பயணம் முடிந்து இன்று விமான நிலையம் செல்வதற்காக திருச்சி வந்தார்.

அப்போது சாலை விபத்தில் மரணம் அடைந்த போலீஸ் ஏட்டு ஸ்ரீதரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவியாக ரூ. 25 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். இந்த நிகழ்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.

சாலை விபத்தில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த ஸ்ரீதர் மனிதாபிமானம் மிக்கவர். அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகி உண்மையான காவல் துறை நண்பனாக பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story