24 மணி நேரமும் குடிநீர் வரப்போகுது: திருச்சி மக்களுக்கு நல்ல செய்தி
திருச்சி நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் குறித்து அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதி மட்டுமல்ல காவிரி கரையில் அமைந்துள்ள ஒரு அழகான நகரமாகும். மழை பொழிவு குறைந்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு விடுவது உண்டு. ஆனால் காவேரி கரையில் அமைந்துள்ள திருச்சி நகரில் நகரில் என்றுமே தண்ணீர் பஞ்சம் வந்தது கிடையாது. இது பல ஆண்டுகளாக உள்ள நிலைமையாகும்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் தற்போது தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மட்டும் நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.மேலும் திருச்சி காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளில் இருந்து தான் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட நகரங்களுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் எதிர்காலத்தில் திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் 24 மணி நேரமும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மண்ணின் மைந்தருமான கே. என். நேரு திட்டமிட்டு உள்ளார். இதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டும் நாள் ஒன்றுக்கு 300 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக பெறுவதற்கு வசதியாக ரூ. 52 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி அருகே அந்தநல்லூர் ஒன்றியம் பெரியார் நகர் கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணறுகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் புதிதாக 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூரில் இயங்கி வரும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக அமைச்சர்கள் இருவரும் திருச்சி மாநகராட்சி சங்கிலிண்டபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன், காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu