சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

திருச்சி நீதிமன்றம் (கோப்பு படம்).
வீட்டின்முன்பு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியப்பிரியா பதவி ஏற்றது முதல் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள எதிரிகளின் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 16.03.2020-ந்தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவதானத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.03.2020-ம்தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து, கீழதேவதானத்தை சேர்ந்த நாச்சிமுத்து மகன் செல்வமணி( 25) என்பவரை கைது செய்து, கடந்த 23.07.2020-ந்தேதி திருச்சி மகிளா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து இன்று 20.01.2023-ம்தேதி தீர்ப்பு வழங்கினார்.
செல்வமணி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் 20ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபாதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும் எனவும் நீதிபதி ஸ்ரீவத்சன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். இவ்வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா பாராட்டி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu