திருச்சியில் நடந்த ஆபரேசன் கஞ்சா வேட்டையில் 12 பேர் கைது

திருச்சியில் நடந்த ஆபரேசன் கஞ்சா வேட்டையில் 12 பேர் கைது
X
திருச்சியில் நடந்த ஆபரேசன் கஞ்சா வேட்டையில் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதற்கு 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என பெயரிட்டுள்ளார்.

டி.ஜி.பி. உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனைக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி நகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த 12 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 64 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் ரயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்த குமார் என்கிற வெள்ளெலி குமார் (வயது 40) கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கஞ்சா கடத்தல் தொடர்பான 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட கூடியவர் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

கமிஷனர் பிறப்பித்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமார் என்கிற வெள்ளெலி குமாரிடம் இன்று சார்வு செய்யப்பட்டது.

Tags

Next Story