திருச்சியில் இன்று 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்: புழு போல் துடித்த மக்கள்
110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் திருச்சியில் இன்று சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது.
திருச்சியில் இன்று 110 டிகிரி ஃபாரன்கீட் வெயில் அடித்ததால் மக்கள் அனலில் இட்ட புழு போல் துடித்தார்கள்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கொடுமையாக உள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் வானிலை ஆய்வு மையங்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசும் வழக்கமான வெயிலை விட நான்கு முதல் ஐந்து பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தன.
அதன் படி இன்று தமிழகத்தில் 18 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு கந்தக பூமி என்று ஒரு பெயர் உண்டு. வேலூருக்கு அடுத்தபடியாக பெரும்பாலும் திருச்சியில் எப்போதுமே வெயில் அளவு அதிக அளவில் தான் பொதுவாக பதிவாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று திருச்சியில் காலையிலிருந்து மாலை வரை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக திருச்சியில் இன்று 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவாகியுள்ளது. இந்த கோடைகாலத்தில் மட்டுமல்ல கடந்த ஆண்டு கோடை காலத்தில் கூட திருச்சியில் அதிகபட்ச வெப்பமானது 109° டிகிரி பாரன்ஹீட் ஆகத்தான் பதிவாகி இருந்தது. அதுவும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில்.
ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே 110 டிகிரி வெயில் பதிவாகி இருப்பதால் மக்கள் இன்று வெளியே நடமாட மிகவும் சிரமப்பட்டனர். வீட்டில் இருந்தவர்களும் அனல் காற்று வீசியதால் அனலில் இட்ட புழு போல் துடித்தார்கள். தமிழகத்தை பொறுத்த வரை இன்று வேலூரிலும், கரூரிலும் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவாகியுள்ளது. இது தவிர ஈரோட்டில் 110 ,திருத்தணியில் 109 ,தர்மபுரியில் 107 ,சேலத்தில் 107 ,மதுரை நகரில் 107 ,மதுரை விமான நிலைய பகுதியில் 107 ,திருப்பத்தூரில் 107 ,நாமக்கல்லில் 106 ,தஞ்சாவூரில் 106 ,சென்னை மீனம்பாக்கம் 105 ,கடலூர் 104 ,பாளையங்கோட்டை 104 ,கோவை 104 நுங்கம்பாக்கம் 102 ,நாகப்பட்டினம் 102 என வெயில் அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu