திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 1.026 பேர் வேட்பு மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 1.026 பேர் வேட்பு மனு தாக்கல்
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 1.026 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ஆம் தேதியான நாளை வரை நடைபெற உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் நேற்று 2-2-2022 வரை 80 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று 3-2-2022-ந்தேதி 254 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் உட்பட இதுவரை மொத்தம் 334 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, துறையூர், முசிறி, துவாக்குடி, லால்குடி ஆகிய 5 நகராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இன்று மட்டும் 329 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் இதுவரை மொத்தம் 403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்றுவரை 78 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மட்டும் 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் போட்டியிட இதுவரை 521 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று வரை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,258 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

Tags

Next Story