திருச்சியில் தனியார் வங்கி கிராமிய லோன் விழாவில் ரூ.1000 கோடி கடனுதவி

திருச்சியில் தனியார்  வங்கி கிராமிய லோன் விழாவில் ரூ.1000 கோடி கடனுதவி
X

திருச்சியில் நடைபெற்ற தனியார் வங்கி லோன் திருவிழாவில் மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் ஒரு பெண்ணிற்கு கடன் தொகைக்கான காசோலை வழங்கினார்.

திருச்சியில் நடைபெற்ற தனியார் வங்கி கிராமிய லோன் விழாவில் ரூ.1000 கோடி கடனுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் இன்று(13.10.2023) எச்.டி.எப்.சி. வங்கியின் சார்பில் நடைபெற்ற கிராமிய லோன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், அங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, விவசாய பெருமக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகளை வழங்கி, விழா பேருரையாற்றினார்.

விழாவில்மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது:-

கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கிடும் வகையில் எச்.டி.எப்.சி. வங்கியின் சார்பில் கிராமிய லோன் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான அடிப்படையான கடன்கள் பயிர் கடன், உரங்களுக்கான கடன் மற்றும் வேளாண் கருவிகளுக்கான கடன் ஆகியவை ஆகும். இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு கடன் உதவி வழங்கப்படவுள்ளது என கேட்டேன். ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்தியாவில் கிராமங்களே நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. கிராமத்தின் முதுகெலும்பு விவசாயமாகும். பல ஆண்டு காலமாக விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம் என்ற போதிலும், விவசாயத்தில் பெரும்பாலும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே அதிகமாக உள்ளனர். நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாய முறைகளை மாற்றிகொள்வதன் மூலம் விவசாயத்தை நாம் இலாபகரமான தொழிலாக மாற்ற முடியும்.

நம்முடைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக ஒருங்கிணைந்த பண்ணையத்தை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி செயல்படுத்த திட்டமிட்டோம். பெரும்பாலான விவசாயிகள் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து நெல், கரும்பு அல்லது பருத்தி விளைவிப்பார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கென சுமார் 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நமது மாவட்டத்தில் வேளாண் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தினோம். தோட்டக்கலை, கால்நடை பராமாpப்புத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கென செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அனைத்து துறைகளையும் இணைத்து பல பலன்களை அவர்களுக்கு கிடைக்க செய்வது. உதரணமாக பயிர்கடன், கால்நடை கடன், மீன்வளர்ப்பு, கோழிவளர்ப்பு, காளான் வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல் என எதுவாக இருந்தாலும் இப்படி ஒட்டுமொத்தமாக விவசாயம் சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் இரண்டு ஏக்கரில் செய்தால் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்று பார்க்க மாதிரி பண்ணையத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்முறை படுத்தினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாதம் ஒன்றுக்கு விவசாயிக்கு கிடைத்தது. ஒரு நபர் மாதம் ஒரு லட்சம் பெற தொழில் நுட்பத் துறையில் பத்து ஆண்டுகள் ஆகும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் முழுமையாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு லட்சம் ரூபாய் ஈட்ட முடியும். அடுத்த தலைமுறையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. எல்லோருமே நகர்புறத்தை நோக்கி இடம் பெயர்வதால் விவசாயம் செய்ய யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒரு டாக்டர் ஆகவோ, இஞ்சினீயர் ஆகவோ அல்லது கலெக்டராகவோ ஆக வேண்டும் என்றே சொல்லி வளர்க்கிறார்கள். ஏன் என்றால் விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்று கருதுவதுதான் காரணம். உண்மை அதுவல்ல விவசாயத்தில் சாதனை புரிந்தோர் பலர் உண்டு. உதாரணமாக நான் இராமநாதபுரத்தில் பணிபுரிந்த போது ஒரு விவசாய பெண்மணி நான்கு ஆடுகள் கடனாக பெற்றார். அதோடு அவர் தனது சிறிய நிலத்தில் பயிர் செய்து வந்தார். தற்போது அவரிடம் 124 ஆடுகள் உள்ளன. மாதம் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறார். அதற்கு காரணம் இத்திட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டு ஆர்வத்தோடு உழைத்து பலன் பெற்றார்.விவசாயிகளை தொழிலதிபர்களாக மாற்றுவதற்காகதான் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்படும் விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

இந்த நிகழ்வில், சுமார் ரூ. 150 கோடி பயிர் கடனும்,ரூ. 850 கோடி சிறு, குறு தொழில் முனைவோருக்கும் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம்முடைய திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இன்று இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. அனைத்து விவசாய பெருமக்களையும் வாழ்த்துகிறேன். இங்கு வருகை தந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏமாற்றமின்றி மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் கடனுதவி வழங்கிட கேட்டுக்கொள்கிறேன். சிறப்பாக கிராமிய லோன் திருவிழா ஏற்பாடு செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், எச்டிஎப்சி வங்கி ஊரக மற்றும் வர்த்தகக் குழுத் தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா, எச்டிஎப்சி வங்கி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!