பச்சமலையில் மலைவாழ் மக்களுக்கு இரவில் தடுப்பூசி செலுத்தும்பணி
கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் வீடு தேடி சென்று வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட பச்சமலையில் டாப்செங்காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பொதுமக்கள் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த வில்லை. இது பற்றி விசாரணை நடத்திய போது, அவர்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த கிராமத்தில் உள்ளவர்கள், வேலைக்கு சென்று வந்த பின்னர் இரவில் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, டாப் செங்காட்டுப்பட்டி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் சம்பத்குமார், உதவி மருத்துவர்கள் தீபக், ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை டாப் செங்காட்டுப்பட்டிக்கு உட்பட்ட 8 மலைகிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் கடந்த 2 நாட்களில் சுமார் 400 வீடுகளுக்கு சென்று 205 பேருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தனர். மலைவாழ் மக்களிடையே கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இரவு நேரங்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu