அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர் செய்த மக்கள்

அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர் செய்த மக்கள்
X

போக்குவரத்துக்கு லாயக்கற்ற பழுதடைந்த சாலை.

வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை, அலட்சியம்செய்கின்றனர் என்று, தாமாக முன் வந்து சாலையை சீர் செய்தனர் பச்சமலை பழங்குடியின மக்கள்.

உப்பிலியபுரம் அடுத்த பச்சமலை, தென் புறநாடு மற்றும் ஆத்தி நாட்டைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் குண்டும் குழியுமாக கிடந்த தார்ச்சாலையைத் தற்காலிகமாக மண் கொட்டியும், மின் தடையை ஏற்படுத்தும் வகையில் உள்ள முள்செடிகளை அப்புறப்படுத்தியும் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், தென்புறநாடு ஊராட்சியில் சுமார் 16 மலைக்கிராமங்களும், சேலம் மாவட்டம் ஆத்திநாட்டில் 32 மலைக்கிராமங்களும் உள்ளது. இதில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்களின் விளைபொருட்களான மரவள்ளிக் கிழங்கு, பலாப்பழம், மாங்காய், முந்திரி போன்றவற்றை சந்தைப்படுத்திட லாரி மற்றும் டிராக்டர்கள் மூலமாகவும், தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட இரு சக்கர வாகனத்திலும் , டாப் செங்காட்டுப்பட்டியிலிருந்து கீழே உள்ள உப்பிலியபுரத்திற்கு சுமார் 20 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். மேலும் உடல் நலம் குன்றியவர்கள் டாப் செங்காட்டுப் பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக உப்பிலியபுரம் அல்லது துறையூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல். வனத்துறையின் மூலம் சுமார் 17 கி.மீ தூரம் போடப்பட்டிருந்த தார்ச்சாலையானது , கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மிக மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக, மிகவும் அபாயகரமான விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்து வந்தது.

பழுதடைந்த சாலையை கிராம மக்கள் சீர் செய்த பின் சாலையின் காட்சி.

வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டம் ஆத்திநாடு மலைவாழ் மக்களும் , திருச்சி மாவட்ட தென்புற நாடு மலைவாழ் மக்களும் சுமார் 2500 பேர் , கடந்த 6 மாதங்களுக்கு முன் உப்பிலியபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகள், தாசில்தார் போன்றோர் உடனடியாக புதிதாக தார்ச்சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தனர். இந் நிலையில், கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தார்ச்சாலை மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும் தற்போது மரவள்ளிக் கிழங்கு அறுவடை சீசன் தொடங்கிய நிலையில் இரு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் தாமாக முன் வந்து ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் மூலம் மண் கொட்டியும், சாலையின் இருபுறங்களிலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள செடிகள் மற்றும் முட்களை அப்புறப்படுத்தியும் உள்ளனர். மேலும் மலைக்கிராமத்திற்கு செல்லும் மின் கம்பிகளில் முள்செடி கொடிகள் வளர்ந்துள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும், மின்வாரியமும் நடவடிக்கை எடுக்காததால், மின் கம்பிகளில் படர்ந்துள்ள முள்செடிகளையும் அகற்றினர். இது குறித்து கூறிய மலைவாழ் மக்கள், "நாங்கள் பல முறை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தார்ச்சாலையை புதிதாக அமைத்து தருமாறு நேரில் சென்று கோரிக்கை மனு அளித்திருந்தோம். மின் கம்பிகளில் செடிகொடிகள் படர்ந்து அதனால் எங்கள் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, அதனையும் சீர் செய்து தர மின்வாரிய அதிகாரிகளிம் கோரிக்கை விடுத்தோம்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக எங்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் எங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்த லாரிகள் வந்து செல்ல வேண்டி உள்ளதால், இரு மாவட்ட மலைவாழ் மக்கள் வீட்டுக்கு வீடு பணம் வசூலித்து அதன் மூலம் சாலையில் தற்காலிகமாக மண் கொட்டி, செடி கொடிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார்ச்சாலையை கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வரும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தார்ச்சாலையை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து சாலையை புதுப்பித்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் தாமதப்படுத்தும் பட்சத்தில், விரைவில் மலைவாழ் மக்கள் ஒன்று கூடி, எங்களுடைய ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் அல்லது சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் ஆகிய ஏதேனும் ஒன்றில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும்" என்று கூறினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!