துறையூர் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி

துறையூர் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி
X

துறையூர் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முருகேசனுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் வெற்றி பெற்றார்.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், 13- வது வார்டு நடுவலூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து காலியாக இருந்த கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சை என மொத்தம் 6 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 13-வது வார்டுக்கு உட்பட்ட அம்மாபட்டி, நடுவலூர், முத்தையம்பாளையம், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இன்று (12-ந் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளரான அபிராமியை விட சுமார் 1,414 வாக்குகள் கூடுதலாக பெற்ற தி.மு.க. வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் விபரம் பின்வருமாறு:

முருகேசன் தி.மு.க -2,570.

அபிராமி அ.தி.மு.க.-1,156.

மனோகரன் தே.மு.தி.க.- 72.

லலிதா- மக்கள் நீதி மையம்- 6.

கலைச்செல்வன் அ.ம.மு.க- 18.

மகேஸ்வரன் சுயேட்சை- 21.

செல்லாதவை; 55.

மொத்தம்; 3,898 வாக்குகள் பதிவானது.

இந்த வார்டை, அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளரும். (சத்துணவு), துறையூர் யூனியன் தேர்தல் நடத்தும் அலுவலருமான மணியன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தி.மு.க. வேட்பாளரான முருகேசனிடம் வழங்கினார். அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணிவேல், சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.

இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்