அவமானத்தால் தற்கொலை- கரூர் ஆசிரியர் டைரியில் உருக்கமான தகவல்

அவமானத்தால் தற்கொலை- கரூர் ஆசிரியர் டைரியில் உருக்கமான தகவல்

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன்.

அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கரூர் ஆசிரியர் எழுதி இருந்த டைரியில் உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 42). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (வயது 42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் (வயது 75) என்பவர் வீட்டுக்கு வந்த சரவணன் அங்கு மாமனார் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட அதே பள்ளியில் சரவணன் ஆசிரியராக பணியாற்றியது தெரியவந்தது.

இந்த நிலையில், சரவணன் சாவதற்கு முன்பாக மனைவி மற்றும் அந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனது கைப்பட எழுதிய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள். ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது எனக்கு அவர்கள் மத்தியில் அவமானமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. தன்னிடம் பயின்ற மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களை நான் மிஸ் பண்ணுகிறேன் என்றும், மனைவி மற்றும் தாயாரையும் மிஸ் பண்ணுகிறேன் என்று உருக்கமாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story