துறையூர்,பச்சமலை பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கல்
திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைமலை பழங்குடியின விவசாயிகளுக்கு குமுளூர் வேளாண்கல்லூரி மூலமாக சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டது.
துறையூர்:
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதி மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள பச்சைமலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு தானியங்களை பயிரிட்டு வந்தனர். காலப்போக்கில் சிறு தானியங்களைப் பயிரிடாமல் மரவள்ளிக் கிழங்கு மற்றும் மா, பலா உள்ளிட்ட பயிர் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். அவர்களை மீண்டும் சிறு தானியப்பயிர்களை பயிரிடுவது தொடர்பாக விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,தென் புறநாடு ஊராட்சி நச்சிலிப்பட்டி கிராமம் , ஊராட்சி .ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகளின் வயல்களில் சிறுதானிய பயிர்களை பயிரிட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில் தமிழக அரசின் சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கேழ்வரகு ,சாமை ,திணை மற்றும் வரகு போன்ற சிறுதானியங்களின் தரமான விதைகள் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலையம், விதை அறிவியல் உதவிப் பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் கலந்துகொண்டு விதை உற்பத்தி தொழில்நுட்பங்களையும், குமுளுர் வேளாண்மை பொறியியல் கல்லூரி முனைவர் ரம்ஜானி, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறு தானிய உற்பத்தியை பெருக்கும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. பச்சமலை கிராமங்களான நச்சிலிப்பட்டி மற்றும் தென்புற நாட்டை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். 25 பேருக்கு 12 பைகளில் ஒரு ஏக்கருக்கு சுமார் 4 கிலோ அளவில்,சுமார் 100 கிலோ அளவிலான சிறுதானிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பச்சமலை நச்சிலிப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் பாக்கிஸ் ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவக்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu