தலைக்கேறிய போதை.. கிணற்றில் தத்தளித்த 2 இளைஞர்கள் மீட்பு
கிணற்றில் தத்தளித்த இளைஞர்களை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.
திருச்சி மாவட்டம், துறையூர் பெரிய ஏரியில் உள்ள கிணற்றின் மீது நேற்று மாலை சுமார் 7 மணியளவில் , பெரியகடைவீதி முருகேசன் என்பவரது மகன் சதீஷ் ( 28), வடக்குத் தெரு, ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (23) ஆகிய இருவரும் தனது நண்பர்களான சோனி, தேவா ஆகியோருடன் மது அருந்தியுள்ளனர். பின்னர் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டும், கும்மாளம் அடித்து விளையாடிக் கொண்டும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராவிதமாக சதீஷ் என்பவர் தவறி கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அவரை காப்பாற்ற ராஜசேகர் என்பவர் கிணற்றில் குதித்துள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரிந்ததால், நீரில் மூழ்காமல் இருந்ததாகவும் தெரியவருகிறது.
கிணற்றின் மீது அமர்ந்திருந்த மற்ற நண்பர்களான சோனி ,தேவா ஆகிய இருவரும், கிணற்றில் விழுந்தவர்கள் மோட்டார் பைப்பை பிடித்து ஏறி விடுவார்கள் என காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் மேலே ஏறி வராததால் தேவா என்பவர் அவசர உதவி எண் 100 க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், 100 அடி அகலமும், 130 அடி ஆழமும் உள்ள கிணற்றில் சுமார் 30 அடி நீரில் தத்தளித்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ் , ராஜசேேகர் ஆகிய 2 இளைஞர்களை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த வாலிபர்களை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட துறையூர் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu