துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்பு

துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல்  ஏரியில் சடலமாக மீட்பு
X
துறையூர் அருகே காணாமல் போன தொழிலாளி உடல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிப்பாளையம் கல்வி நகரைச் சேர்ந்தவர் மருதை மகன் முருகேசன் (வயது 38). ரைஸ்மில் தொழிலாளி. இவரது மனைவி லெட்சுமி. இந்த தம்பதிக்கு யுவஸ்ரீ(10), தர்மேஷ் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று தன்செல் போனுக்கு வந்த அழைப்பை ஏற்று பேசிய முருகேசன் உடனே வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். நண்பருடன் ஏரிக்கரை அருகே மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முருகேசன் வீடு திரும்பவில்லை. அன்றிரவு அவருடைய நண்பர் முருகேசன் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியிடம் முருகேசன் வீட்டுக்கு வந்து விட்டாரா? என விசாரித்தாராம்.

அதே போன்று நேற்று காலையும் அந்த நபர் விசாரித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த லெட்சுமி தன் கணவருக்கு போன் செய்தபோது ரிங் மட்டும் சென்று அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நேற்று மாலை உப்பிலியபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து உப்பிலியபுரம் போலீசார் முருகேசனின் செல்போன் எண் மூலம் அதன் இருப்பிடத்தை தேடியபோது வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரிய வந்தது.

ஜம்பேரி கடைக்கால் பகுதி நீரில் மாலை 6 மணி அளவில் முருகேசன் உடலை உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் உப்பிலியபுரம் போலீசார் மீட்டனர். அதன் பின்னர் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்