திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த அ.தி.மு.க.வினர்

திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த அ.தி.மு.க.வினர்
X
காரை முற்றுகையிட்டவர்களுடன் அமைச்சர் நேரு பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை அ.தி.மு.க.வினர் மறித்து கோரிக்கை வைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் கடந்த 2020 -21 ஆம் ஆண்டில் நடந்த முடிக்கப்பட்ட குடிமராமத்து பணிகளுக்கான டெண்டரை எடுத்து பணிகள் முடித்து அதற்கான தொகையை இதுவரை தராத ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் ஆதனூர் செல்வராஜ் ஆகிய இருவரும் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

இருவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதால் இதனை அறிந்த அ.தி.மு.க.வினர் துறையூர் பாலக்கரை பகுதியில் ஒன்று கூடி இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சேலத்திற்கு திமுக இளைஞர் அணி மாநாட்டு பணிகளுக்காக சென்று விட்டு துறையூர் வழியாக திரும்பிய அமைச்சர் நேருவின் காரை அ.தி.மு.க.வினர் வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


வழிமறித்த அ.தி.மு.க.வினரிடம் பேசிய அமைச்சர் நேரு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் நாளைக்கே பணத்தை தர சொல்கிறேன் எனவும் கூறியதால் சமாதானம் அடைந்த அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அமைச்சர் வருவது துறையூர் போலீசாருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. வினரை உடனடியாக பேச்சுவார்த்தைமூலம் சமாதானப்படுத்தி அனுப்பாமல் அமைச்சரின் காரை முற்றுகையிடும் அளவிற்கு போலீசார் பாதுகாப்பு குறைபாட்டில் ஈடுபட்டதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.

அமைச்சர் நேரு வழக்கம் போல துறையூர் வழியாக சென்று மீண்டும் வரும்போது வரவேற்பு கொடுக்கும் தி.மு.க.வினரிடையே இந்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags

Next Story